இராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது உறுதி? தயார் ஆகும் திமுக!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பல விதங்களில் ஆச்சரியங்களின் குவியலாக இருக்கும். அதில் மோடி எங்கே போட்டியிடுவார் என்பதும் ஒன்று. சில ஆண்டுகளாகவே அவர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்ற குரல் ஆங்கங்கே தமிழக பாஜகவினரிடம் ஒலித்து வருகிறது. தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயணத்தையொட்டி இக்குரல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிடவேண்டும் என மக்கள் விரும்புவதாக அண்ணாமலை கூறினார். ஏற்கெனவே காசியில் போட்டியிட்டு எம்பி ஆகிவிட்ட மோடி இந்துக்களின் இன்னொரு முக்கிய புண்ணியத் தலமான இராமேசுவரம் அடங்கி உள்ள இராமநாதபுரம் தொகுதியில் ஏன் போட்டியிடக்கூடாது? தென்னிந்தியாவில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்கிற நிலையை மோடி இங்கே போட்டியிடுவதன் மூலம் மாற்றி அமைப்பார் என்றும் சில குரல்கள் எழுந்துள்ளன.

வடக்கே அமேதியிலும் தெற்கே வயநாட்டிலும் இராகுல்காந்தி போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டும் அவர்கள் விருப்பம் தமிழ்நாட்டில் மோடி போட்டியிட வேண்டும் என்பதாகும்.

ஆனால் அதிமுக கூட்டணியுடன் தான் பாஜக தமிழ்நாட்டில் களம் காணவேண்டும் என்ற நிலை உள்ளது. தனிப்பட்ட நிலையில் பாஜக தொகுதிகளை வெல்லும் நிலை இல்லை. இந்நிலையில் பிரதமர் வேட்பாளரை ராமநாதபுரத்தில் போட்டியிட வைத்து, அவர் வெற்றி பெறுவது கடினமாகி விட்டால் என்ன செய்வது என்ற கருத்தும் உள்ளது.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை

ஆனால் இராமநாதபுரத்தைவிட மோடிக்கு பாதுகாப்பான தொகுதி மதுரைதான் என்று அரசியல் நோக்கர்கள் சிலர் வடக்கே செய்தி அனுப்பியிருக்கின்றனர். கோயம்புத்தூரும் கன்னியாகுமரியும் பாஜகவுக்கு கணிசமான ஆதரவாளர்கள் இருக்கும் தொகுதிதான் என்றாலும் மதுரையின் பாரம்பரியமும் தெற்குதிசையில் அதற்கு இருக்கும் அடையாள முக்கியத்துவமும் ஒரு காரணம் என்றால், இத்தொகுதியில் இருக்கும் ஆழமான இந்துத்துவ வாக்குகளும் உதவும் என்கிறார்கள்.

தமிழ் வாக்காளர்கள் நம் தொகுதியில் பிரதமர் வேட்பாளரே போட்டியிடுகிறார் என்றால் அவருக்கு வாக்களிக்கத் தவறமாட்டார்கள்; வந்தாரை வாழவைக்கும் பண்பு உதவி செய்யும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அதேபோல் மத்திய புலனாய்வுத் துறையிலும் இராமநாதபுரம் அவ்வளவு வெற்றிக்குப் பாதுகாப்பான தொகுதி அல்ல என்று கூறியிருப்பதாகத் தகவல் உண்டு.

மோடி அல்ல; யார் வந்தாலும் தோற்கடிப்போம் என்று சவால் விடுகிறார் திமுகவின் அமைச்சர் சேகர்பாபு.

மோடி போட்டியிடும் பட்சத்தில் அதன் கூட்டணிக்கட்சியான அதிமுகவின் எதிர்வினை எப்படி இருக்கும்?

“ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் தாமரை சின்னத்துக்கு நானே வாக்கு கேட்பேன்’’ என்று சமீபத்தில் அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்களுக்கு இருக்கும் உரசல்களுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட்டால் மோடி தமிழகத்தில் போட்டியிடுவதும் விரைவில் உறுதியாகிவிடும்.

தி.மு.க. மாணவரணித் தலைவர் ராஜிவ்
தி.மு.க. மாணவரணித் தலைவர் ராஜிவ்

மோடி இங்கே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் அவர் போட்டியிடும்பட்சத்தில் திமுகவுக்கு தமிழ்நாட்டில் பெரும் தலைவலிதான் உண்டாகும்! அதேபோல் சமமான அல்லது அதைவிடக் கூடுதல் தலைவலி பாஜகவுக்கு உருவாகும், தங்கள் பிரதமர் வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெற வைக்கவேண்டுமே என்று.

மோடி போட்டி குறித்து தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் மாணவர் அணித் தலைவரும் இராமநாதபுரம் மாவட்டப் பிரமுகருமான வழக்குரைஞர் இராஜீவ்காந்தியிடம் கேட்டோம்.

யார் எதிரணியில் போட்டியிடுகிறார் என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை; பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா என்பது தெரியவில்லை; ஒரு வேளை அவரே இங்கு போட்டியிட்டாலும், பா.ஜ.க.வின் அரசியல் இங்கு எடுபடாது என அடித்துச் சொல்கிறார் இராஜீவ்.

மேலும், ”இராமநாதபுரம் திராவிட இயக்கத்தின் திமுகவின் கோட்டை. வரும் 17ஆம் தேதி இராமநாதபுரத்தில் பத்து மக்களவைத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் என எங்கள் தலைவர் அறிவித்து, அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவகையிலான மத நல்லிணக்கத்தை இங்கு பார்க்கமுடியும். இங்கே இந்துக்கள்- இசுலாமியர் இடையிலான சமூக உறவு வேறு மாதிரியானது. ஏர்வாடி தர்காவுக்குச் செல்லும் இந்துக்களும் இந்துக் கோயில்களுக்குச் செல்லும் இசுலாமியர்களும் கொண்ட மண் இது. இராமநாதபுரம் மன்னன் கிழவன் சேதுபதி காலத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டபோது, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்களைக் கொண்டுதான் கீழக்கரை பள்ளியையும் கட்டினார்கள் என்பது இராமநாதபுரத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு வரலாற்றுச் சான்று. இந்தப் பகுதியில் இந்துக்களின் குடும்பங்களில் இசுலாமியப் பெயர்களும் இசுலாமியர் குடும்பங்களில் இந்துப் பெயர்களும் இருப்பதை இன்றும் பார்க்கமுடியும். இப்படியொரு நல்லிணக்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க. விஷ விதைகளைத் தூவுகிறது. மோடியே இங்கு நின்றாலும் அவர் டெபாசிட் இழப்பார். நாங்கள் இங்கு தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். தலைவர் முதலமைச்சர் நேரடியாக இங்கு கவனம் செலுத்துகிறார். தி.மு.க.வின் வெற்றி உறுதி. எங்கள் கட்சியின் வேட்பாளரைப் பற்றி தலைவர்தான் இறுதியாக முடிவெடுப்பார்.” என உறுதிபடச் சொல்கிறார், இராஜீவ்காந்தி.

logo
Andhimazhai
www.andhimazhai.com